சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய இருவரும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் சிலர் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
உதித்சூர்யாவும், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் அளித்த தகவலின்பேரில் சென்னையை சேர்ந்த 3 மாணவர்களை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதில், மாணவர்கள் 3 பேரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, அவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் பிடித்து விசாரித்தனர்.
- பாலாஜி மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர் பிரவீண், அவரது தந்தை சரவணன்,
- எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ்,
- சத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகிய 6 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, உத்தரபிரதேசத்திலும், டெல்லியிலும் இவர்களுக்காக வேறு நபர்கள் நீட் தேர்வு எழுதியதையும், இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியதையும் 3 மாணவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து 6 பேரும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்து, மாணவர் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரும் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு காலையில் அழைத்து வரப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றறது.
டி.எஸ்.பி. காட்வின் ஜெகதீஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். பிற்பகலில் மாணவி அபிராமியும் விசாரணைக்காக தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
அவருடன் அவரது தாயாரும் சிபிசிஐடி அலுவலகம் வந்தார். நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் வழக்கில் மாணவர் ராகுல் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளார். இது தவிர மாணவர் ராகுல், மாணவி அபிராமி ஆகியோரிடமும், அவர்களது பெற்றோரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீண் மற்றும் அவரது தந்தைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போலீசார், இருவரையும் தேனி நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம் தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் முகமது இர்பான் என்ற மாணவரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள மாணவன் உதித் சூர்யா கொடுத்த தகவலின் அடிப்படையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று முகமது இர்பான் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது, அந்த மாணவன் கடந்த 6ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வராதது தெரியவந்துள்ளது. கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ், வாணியம்பாடியில் உள்ள பெற்றோரை தொடர்புகொண்டு கேட்டபோது, மாணவன் வெளியூர் சென்றிருப்பதாகவும், வந்தவுடன் அழைத்து வருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், முகமது இர்பான் தலைமறைவாகிவிட்டதாகவும், மொரீஷியஸ் தப்பிச் சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தை தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்கள் சரிபார்ப்புக்கு, புகைப்படம், கைரேகை உள்ளிட்ட விவரங்களை மருத்துவக் கல்வி இயக்கம் ஏற்கெனவே அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ளது.
ஆனால், முகமது இர்பான் கல்லூரிக்கு வராததால், அந்த மாணவனின் விவரங்கள் இன்னும் சரிபார்க்கப்படவில்லை.
இதனிடையே, தேனி மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் ஆகிய இரண்டு பேராசிரியர்கள், மாணவன் உதித்சூர்யாவுக்கு உதவிகள் செய்ததாகவும், வருகைப் பதிவேட்டை திருத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கானா விலக்கு காவல் நிலையத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் மனு அளித்துள்ளார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்குமாறும் புகார் மனுவில் அவர் கேட்டுள்ளார்.