நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், உதித் சூர்யா மீதும், அவரது தந்தை வெங்கடேசன் மீதும், 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சேர்ந்ததாக, கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சலில் புகார் வந்தது.
இதுதொடர்பாக கண்டமனூர் போலீசில், புகார் அளிக்கப்பட்டதை அடுத்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், புதன் கிழமை அன்று திருப்பதியில் தனது குடும்பத்துடன் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார்.
தேனி தனிப்படை போலீசார் உதித் சூர்யாவையும், அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் தாய் கயல்விழி ஆகியோரையும் கைது செய்து சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைத்தனர்.
இதை அடுத்து அவர்களிடம் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நள்ளிரவில் தேனி அழைத்துச் செல்லப்பட்டனர்.
சமதர்மபுரத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் உதித் சூர்யா மற்றும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மருத்துவ கல்லூரி பேரரசிரியர்கள் 2 பேரை, சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
இதை அடுத்து அவர்கள் அனைவரும் காலை 9 மணி அளவில், சிபிசிஐடி முன் ஆஜராகினர்.
உதித் சூர்யா சேர்க்கை தொடர்பான ஆவணங்களுடன் அவர்கள் சிபிசிஐடி அலுவலகம் சென்றனர். உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன், சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஆவர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும், வெங்கடேசனும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே வெங்கடேசனுக்கு உதவும் முயற்சிகள் நடைபெற்றதா?? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
3 மணி நேரம் விசாரணை நடைபெற்ற அதேவேளையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிபிசிஐடி எஸ்பி தலைமையிலான போலீசார் சோதனையும் நடத்தினர். அங்கு சில மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே உதித் சூர்யா மீதும், அவரது தந்தை வெங்கடேசன் மீதும், ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் உதித் சூர்யாவின் தாய் கயல்விழிக்கு, எந்த அளவுக்கு பங்கு உள்ளது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெங்கடேசன் ஒரு அரசு மருத்துவர் என்பதால், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன