நிலக்கரி இறக்குமதி முறைகேடு நடைபெற்றதற்கான ஆதரங்களை மார்ச் 13’ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து சுமார் ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதால் ஊழலை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு சாதகமாக இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இதே போன்று நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிக்கப்பட்ட போது, நிலக்கரிக்கு டன் ஒன்றிற்கு 13 டாலர் வீதம் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், விதிகளை மீறி, டெண்டர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் டெண்டர் இறுதி செய்ததாகவும்
இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜய் ஆனந்த் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்
அதிக விலைக்கு நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து வாங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், ஒரு சில நபர்களின் ஆதாயத்துக்காக பொது மக்கள் பாதிக்கப்பட கூடாது என கருத்து தெரிவித்தனர். மேலும், டெண்டர் முறைகேடு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் மார்ச் 13 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை மார்ச் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே