நீட் ஆள்மாறாட்டம் : திருப்பதியில் கைதான உதித் சூர்யா குடும்பம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகாருக்குள்ளாகி திருப்பதியில் கைதான மாணவர் உதித் சூர்யாவின் குடும்பத்தினர், நள்ளிரவில் தேனி சிபிசிஐடி அலுவலகம் அழைத்துவரப்பட்டனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தாம் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமின் மனுத் தாக்கல் செய்த உதித் சூர்யா, தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகியிருந்தார்.

வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், உதித் சூர்யாவைத் தேடி தனிப்படை போலீசார் சென்னை வந்தனர்.

தண்டையார்பேட்டையில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்ததால், உதித் சூர்யாவையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வந்தனர். இந்த சூழலில் உதித் சூர்யாவின் செல்போன் சிக்னல் திருப்பதியை சுட்டிக் காட்டியதால், போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது திருப்பதி மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருந்த உதித் சூர்யாவையும், அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் தாயார் கயல் விழியையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் மூன்று பேரும் நள்ளிரவு ஒன்றரை மணியளவில் தேனியிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். இன்று காலை அவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே