நிசான் கார் உற்பத்தி நிறுவன CEO தனது பதவியிலிருந்து விலகல்

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஊதியம் பெற்றது நிரூபிக்கப்பட்ட நிலையில், நிசான் கார் உற்பத்தி நிறுவனத்தின் சி.இ.ஓ தனது பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி மோசடி தொடர்பான புகாரில் நிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோசன் (Carlos Ghosn) கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு பிறகு நிசான் நிறுவன பங்குகள் சரிவடைந்ததோடு, கடும் வீழ்ச்சியையும் சந்தித்தது. அந்த சமயத்தில் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவரான (Hiroto Saikawa) ஹிரோடோ சைகாவா, நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகையை ஊதியமாக பெற்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிக ஊதியம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஹிரோடோ ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதாலேயே நிஸான் சி.இ.ஓ பதவி விலக முடிவு செய்திருப்பதாக, வணிக செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தகவலை நிசான் நிறுவன வட்டாரங்கள் இதுவரை உறுதி செய்யவில்லை.

முன்னதாக ஹிரோடோ இந்திய மதிப்பில் சுமார் 3கோடி ரூபாயை தனது இழப்பீடு தொகையில் கூடுதலாக இணைப்பதற்காக, நிறுவனத்தின் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே