“மோடி அரசின் தவறால் தான் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது” : மன்மோகன் சிங்

மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி போன்ற பாஜக அரசின் தவறுகளால் சரிந்து போன இந்திய பொருளாதாரம் பின்னர் மீளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதம் என்பது இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலையை காட்டுவதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

உற்பத்தித் துறையில் வளர்ச்சி 0.6 சதவீதம் மட்டுமே இருப்பது வேதனை அளிப்பதாகவும், மத்தியில் ஆளும் அரசில் தன்னாட்சி நிறுவனங்களில் சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மந்த நிலையால் ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாக குறிப்பிட்ட மன்மோகன் சிங், முறைசாரா துறையில் இதேபோல் பெரிய அளவிலான வேலை இழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு வருவது சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக எச்சரித்துள்ள மன்மோகன் சிங், பிரதமர் மோடி அரசின் கொள்கைகளின் விளைவால் வேலைவாய்ப்பு இல்லாத வறட்சி தான் ஏற்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி தனது இருப்பில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்குவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மத்திய அரசு பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் திட்டமிடல் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

வெறுப்பு அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே