நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடத்தப்பட்டன. வடமாநிலங்களில் மக்கள் கார்பா நடனமாடி நவராத்திரியைக் கொண்டாடினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மா கோவிலில் நவராத்திரியின் முதல்நாளில் பெருந்திரளாக பக்தர்கள் திரண்டனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றன.

உத்தப்பிரதேச பிரயாக் ராஜ் நகரில் உள்ள துர்கா ஆலயத்தில் நவராத்திரி பூஜைகளை முன்னிட்டு சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

ஒடிசா மாநிலம் காளஹந்தியில் நவராத்திரி துர்கா பூஜை வழக்கமான சாஸ்திர சம்பிரதாயப்படி பூஜை சடங்குகளுடன் தொடங்கியுள்ளது.

மாலையில் பக்தர்கள் தரிசிக்க துர்க்கை அம்மன் உள்ளிட்ட கோவில் விக்ரகங்களின் முகங்களை மூடிய திரைகள் விலக்கப்பட்டன. இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நவராத்திரி களைகட்டியது. முதல் நாளிலேயே கார்பா நடனங்கள் ஆட ஏராளமானோர் திரண்டனர்.

முதலமைச்சர் விஜய் ரூபானி நவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

சூரத் நகரில் நடைபெற்ற கார்பா நடனங்களின் போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடனமாடியவர்கள் ஹெல்மட் அணிந்து வந்தனர்.

வடோதராவில் நவராத்திரிக்கான கார்பா நடனத்திற்காக மைதானத்தை தயாராக வைத்திருந்த நிலையில் அங்கு பலத்த மழை பெய்து தண்ணீர் தேங்கியதால் கார்பா நடன நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே