தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் மகன் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர் கடைக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து சக பெண் ஊழியர்கள் கையெடுத்து கும்பிட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புகார் கூறிய பெண் போலீசார் உதவியுடன் கடைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கையில் சிறிய பதாகையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள இந்தப் பெண் தேனி கணபதி சில்க்ஸ் ஜவுளிக்கடையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை பிரிவில் பணிபுரிந்தவர்.
இவர் போலீசில் அளித்த பாலியல் புகாரின் பேரில் கணபதி சில்க்ஸ் உரிமையாளர் மாரியப்பனின் மகன் முருகனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
முருகன் தன் வழக்கறிஞர்கள் மூலம் ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட தனக்கு நீதி வேண்டும், வாழ்க்கை வேண்டும் எனக்கேட்டும் இல்லையெனில் கடையை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் கணபதி சில்க்ஸ் வாசலில் அரசியல் கட்சியினர் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்
கடையில் வாயிலை மறைத்து போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயம், அந்தப்பெண் ஆதரவாளர்களுடன் கணபதி சில்க்ஸ் ஜவுளிக்கடைக்குள் புகுந்தார், அந்த பெண்ணை பார்த்ததும் அங்கு பணியில் இருந்த சக பெண் ஊழியர்கள் உள்ளே வர வேண்டாம் எனக்கேட்டு கையெடுத்துக் கும்பிட்டு தடுத்தனர்.
ஆனால் அந்தப் பெண் உரிமையாளரை வரச்சொல்லுங்கள் எனக்கூறி ஆவேசமானார், மற்ற பெண்களோ ஏற்கனவே போலீஸ் வழக்கு போட்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் மீண்டும் கடைக்குள் வந்து வம்பு செய்யாதீர்கள், கடையை அடைத்தால் தங்கள் வாழ்வாதாரம் வீணாகி விடும் என்று கெஞ்சிக்கேட்டனர்.
ஆனால் அங்குவந்த போலீசார் உதவியுடன் ஊழியர்களை விலக்கிக் கொண்டு கடைக்குள் புகுந்த அந்த பெண் கையில் சிறுபதாகையுடன் கணபதி சிலைக்கு அருகில் அமர்ந்து கடைக்குள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்.
கடையின் சூப்பர்வைசர்கள் மற்ற பெண் ஊழியர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். பாலியல் வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் கடைக்குள் அத்துமீறி நுழைந்து போராடுவது சட்ட விரோதம் என்பதை எடுத்துகூறி அந்தப்பெண்ணையும் அவரது ஆதரவாளர்களையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த போராட்டத்தால் சில மணி நேரம் அந்த கடையில் வியாபாரம் பாதிக்கப்பட்டதோடு பரபரப்பான சூழல் உருவானது.