தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 போட்டிக்கான இந்திய அணி முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மயன்க் அகர்வால், ரோகித் சர்மா, செடேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் , விருத்திமன் சாஹா, ரவிசந்திர அஸ்வின், ரவிந்தர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லோகேஷ் ராகுலுக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெஸ்ட் இன்டீஸ் டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்பட்ட லோகேஷ் ராகுல் சிறப்பாக செயல்பட வில்லை. இதனால், அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவது குறித்து பரிசீலக்கப்படும் என தேர்வுக் குழு ஆணையர் பிரசாத் தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.