தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ மற்றும் ஆணையத்தின் விசாரணை நிலை என்ன?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ மற்றும் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து இன்று தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தடை உத்தரவை பிறப்பித்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானதாக குற்றச்சாட்டும் அவர் ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆக வேண்டும் எனவும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து இன்று தகவல் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே