திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நடைபெற்ற அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலத்தில் சுவாமி எழுந்தருளி அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் காலை-மாலை வேளைகளில் உற்சவர் மலையப்ப ஸ்வாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி-பூதேவி சகிதமும் சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலிப்பார்.

வரும் 4ந் தேதியன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளும் கருடசேவை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி, திருமலை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.

பிரம்மோற்சவத்திற்காக வரும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக விஐபி தரிசனம் உள்ளிட்ட அனைத்து முன்னுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 4,200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 1500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே