திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியுள்ள நிலையில், முதலாவது நாளில் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் வைத்தபடி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று வெங்கடேஸ்வர சுவாமிக்கு சமர்பித்தார்.

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடிய படியும், பஜனைகள் செய்தும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே