நள்ளிரவில் வீடு புகுந்து திருடும் திருடர்கள் அச்சத்துடன் உள்ளே நுழைந்து கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்த காலம் மலையேறிவிட்டது. தற்காலத்து திருடர்கள் சாவகாசமாக வீட்டுக்குள் நுழைந்து நின்று நிதானமாக வீட்டை அலசி ஆராய்ந்து விட்டு, ஊஞ்சலில் அமர்ந்து களைப்பு தீர ஆடி விட்டுச் செல்கிறார்கள். இதுபோன்ற ஜாலி திருடர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுதாகர் நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி பள்ளி ஆசிரியரான இளங்கோ என்பவர் தமது வீட்டை சுற்றிலும் பாதுகாப்பிற்காக 6 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்.
இதன் பின்னர் திருட்டு பயம் தீர்ந்தது என நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால் அவரது நிம்மதி நீண்ட நாள் நிலைக்கவில்லை. சில நாட்களுக்கு முன் தமது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் பதிவாகியிருந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார்.

பக்கத்து வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் மற்றும் உதிரி பாகங்களை திருடும் நபர் ஒருவர், இளங்கோவின் வீட்டு மொட்டை மாடிக்கு வருகிறார். அங்கு என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை நின்று நிதானமாக ஆய்வு செய்யும் அவர், பின்னர் அங்கு உள்ள ஊஞ்சலில் அமர்ந்து களைப்பு தீர ஆடுகின்றார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அண்மைகாலமாக இதுபோன்ற ஜாலி திருடர்களின் கைவரிசை அதிகரித்து வருகின்றது அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.