திகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உறக்கமின்றி இரவைக் கழித்ததாக கூறப்படுகிறது.

கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ப.சிதம்பரத்துக்கு சிறைவாசம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சுமார் 600 முதல் 700 கைதிகளில் ஒருவராக திகாரில் சிறை எண் 9ல் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரும் நிலையில், அதனை அவர் சிறையில் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறையில் அவருக்கு தனி அறை, மரக்கட்டில், புத்தகம் படிக்க மேஜை நாற்காலி மேற்கத்திய கழிவறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. சிறைக்குள் மூக்கு கண்ணாடி, மருந்துகள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர் இசட் பிரிவு பாதுகாப்பு பெற்றவர் என்பதால் அதே பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் முதல் நாளான நேற்று முன்தினம் இரவில்  சிறிதளவு ரொட்டி, பருப்பு கூட்டு, சோறு சாப்பிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மரக்கட்டிலில் படுத்த அவர், தூக்கமின்றி இரவைக் கழித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று காலையில் எழுந்த அவர், டீ, கஞ்சி ஆகியவற்றை உட்கொண்டதாகவும் சிறை முற்றத்தில் சிறிதுநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ஆன்மீகப் புத்தகங்களையும் நாளேடுகளையும் படித்ததாகவும், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் சிறைக்கு வந்து அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே