தலைமை நீதிபதி தஹில் ரமணி இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இன்று பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

பணியிட மாற்ற முடிவால் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி இன்று பணிக்கு வராத நிலையில், அவரது அமர்வில் இன்று விசாரிக்கப்பட இருந்த 75 வழக்குகள், வேறொரு அமர்வில் பட்டியலிடப்பட்டன.

இதனிடையே, தலைமை நீதிபதி தஹில் ரமணி பணியிட மாற்றத்தை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நியமிக்கப்பட்டவர், வி.கே.தஹில் ரமணி. இவரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது. இந்த முடிவால் தஹில் ரமாணி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்திற்கு தஹில் ரமாணி கடிதம் அனுப்பியிருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த கோரிக்கையை கொலீஜியம் ஏற்காத நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசுத் தலைவருக்கும் தஹில் ரமாணி ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கடிதத்தின் மீதான முடிவு தெரியும் வரை, தஹில் ரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகளை மேற்கொள்ள மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமணி இன்று வழக்கமான நீதிமன்ற பணிகளுக்கு வராத நிலையில், அவரது அமர்வில் விசாரணைக்காக ஏற்கெனவே பட்டியலிடப்பட்டிருந்த 75 வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய இரண்டாவது அமர்வுக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி தஹில் ரமணி, நீதிபதி துரைசாமி அமர்வில் இன்று பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் மட்டும் இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் அலுவலகம் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதலாவது அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி துரைசாமி தனியே வழக்குகளை விசாரிப்பார் என்றும் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தலைமை நீதிபதி தஹில் ரமாணி மேகாலயாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னையில் டாக்டர் பால் தினகரன் சாலையில் உள்ள தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் இல்லத்திற்கு இன்று காலை சென்று அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படும் நிலையில், என்ன பேசப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட  மாற்றம் தொடர்பாக தலைமை நீதிபதி தஹில் ரமணி அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே