ஐ.நா சபையில் புறநானூற்றுப் பாடலான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை மேற்கோள் காட்டிப் பேசி பிரதமர் மோடி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார் என்றும் தமிழக மக்கள் அதற்காக அவரை பாராட்ட வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்தவர் என்பதால்தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழில் மேற்கோள் காட்டி பேசி வருவதாகவும் அதற்காக தமிழக மக்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், பேனர் விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை காட்டுவதாகவும், யார் தவறு செய்தாலும் அதிமுக அரசு தண்டிக்க தயங்காது எனவும் கூறினார்.