தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கடலோர தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். ஒடிசா அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்வதால் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை இருக்கும். கேரளா கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிதமான மழை மட்டுமே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் மேலூரில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெரம்பலூர், செட்டிகுளம், நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் ஐந்து சென்டி மீட்டர் மழையும் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, தர்மபுரி, நீலகிரி மாவட்டம் தேவாலா, குன்னூர், திருச்சி, துறையூர் பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் அந்த பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் அந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே