புதிய இந்தியாவில் ஊழலுக்கு இடமில்லை – பிரதமர் மோடி

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற மலையாள மனோரமா நாளிதழின் கருத்தரங்கில் டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி தரமான விமர்சனங்களை தாம் எப்போதும் வரவேற்பதாக கூறினார்.

பொதுவாழ்க்கையில் மாறுபட்ட கருத்துக்களை கேட்க எப்போதும் இடமுண்டு என்ற அவர், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் சமூக நல்லிணக்கத்தை பேணுவது அவசியம் என்றார். பொது வாழ்வில் ஒத்த கருத்துகளை கொண்டவர்களுடன் பணியாற்றுவது பல வழிகளில் நன்மை தரும் என்ற அவர், தாம் இப்போது அப்படி ஒரு சூழலில் இயங்கி வருவதாக கூறினார். ஆனாலும் கூட ஒத்த கருத்துக்களை கொண்டிருக்காத தனிமனிதர்கள் அமைப்புகளுடன் தொடர்ந்து செயலாற்றுவதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்போது புதிய இந்தியாவை உருவாக்கப் பட்டுள்ளது என்ற பிரதமர், முன்பு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரிய நகரங்களில் வசிப்போர் பெரிய அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்று குறிப்பிட்டார். புதிய இந்தியாவில் திறமை இருப்பவர்கள், இப்போது தங்களின் பெயரை பொறிக்க போதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்ற அவர், முன்பு முடியாது என்று கருதப்பட்ட பல விஷயங்கள் இப்போது நடைமுறை சாத்தியமாக உள்ளது என்றார்.

புதிய இந்தியா குறிப்பிட்ட சிலரை பற்றியது அல்ல ஒவ்வொரு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார். புதிய இந்தியாவில் யாராக இருந்தாலும் ஊழலுக்கு அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இப்போது நடைபெறுவது மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி என்ற அவர், வீடுகள் அற்ற ஒன்றரை கோடி பேருக்கு மிகத் துரிதமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது என்றார். வெறும் நான்கு சுவர்கள் கட்டி வீடுகள் என்ற பெயரில் ஏழைகளுக்குக் கொடுக்க மத்திய அரசு விரும்பவில்லை என்ற பிரதமர், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் இல்லங்களை உருவாக்கவே அரசு பாடுபடுகிறது என்றார்.

சமீபத்தில் தான் பஹ்ரைன் சென்றபோது சிறையில் இருந்த இந்தியர்கள் 250 பேர் விடுதலை செய்யப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். இதேபோன்று ஓமன், சவுதி அரேபியாவில் இருந்த இந்தியர்களும் விடுவிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே