தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனத்தாலும் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்கள் பரவலாக மழை பெய்யக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி,  நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 12 சென்டி மீட்டரும், போளூரில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

ஆரணியில் 8 சென்டி மீட்டர், மதுரை மேட்டுப்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வேலூர் மாவட்டம் ஆம்பூர்,  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தலா 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே