தனியார் தொலைக்காட்சி மீது காவல் நிலையத்தில் மதுமிதா புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தி தாகவும் அதை தனியார் தொலைக்காட்சி கண்டிக்கவில்லை எனவும் நடிகை மதுமிதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,ஜில்லா போன்ற படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்திருப்பவர் நடிகை மதுமிதா.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதில் ஒருவர் நடிகை மதுமிதா.இதுவரை பல போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். ஆனால் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதற்கு மதுமிதா, நான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. என் மீது பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா நாசரேத் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் போட்டியில் 56வது நாளில் தனது கருத்தை தெரிவித்ததற்கு அப்போட்டியில் உள்ள சக போட்டியாளர்கள் தன்னை கொடுமை செய்ததாகவும் இதை நிறுவனமும், தொகுப்பாளரும் கண்டிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒப்பந்த அடிப்படையில் தற்போது வீட்டில் அடைந்து கிடப்பதாகவும் அதிலிருந்து தன்னை விடுவிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமும், தனியார் தொலைக்காட்சியும் தனக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் தன்னைப்பற்றி
தவறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்யக்கூடாது எனவும் அந்த நிறுவனங்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே