தனியாரிடம் ஒப்படைக்கப்படவிருக்கும் முதல் ரயில்

தனியாரிடம் ஒப்படைக்கப்படவிருக்கும் முதல் ரயிலான தேஜாஸ் விரைவு ரயில், விமானத்துக்கு இணையான வசதிகளுடன் அடுத்த மாதம் 4-ஆம் தேதி சேவையைத் தொடங்குகிறது.

டெல்லி – லக்னோ இடையேயான தேஜாஸ் விரைவு ரயில் ரயில்வே உணவக மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. கட்டுப்பாட்டில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

முதல் கட்ட இயக்கம் மற்றும் சேவைகளுக்குப் பின் ஐ.ஆர்.சி.டி.சி. தேஜாஸ் ரயில் செயல்பாடுகளை டெண்டர்கள் மூலம் தனியார் நிறுவனங்களை தேர்வு செய்து ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில், ஓட்டுநர், கார்டு, ரயில்வே பாதுகாப்பு படை ஆகியவற்றை வழங்கும் நிலையில், டிக்கெட் ஊழியர்கள், ரயில் பராமரிப்பு, உணவு வசதி உள்ளிட்டவற்றை ஐ.ஆர்.சி.டி.சி. கவனித்துக்கொள்ளும்.

இயக்குதலுக்கான கட்டணங்களை ரயில்வேக்கு ஐ.ஆர்.சி.டி.சி. வழங்கும். இந்த ரயிலில் பயணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு பயணிகள் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

டிக்கெட் கட்டணங்கள் மாறுதலுக்குட்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ரயிலில் விமானத்துக்கு இணையான வசதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பணிப் பெண்கள் போன்று ரயில் பணிப்பெண்கள் அமர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

எக்சிக்யூட்டிவ் வகுப்பு பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் விமான நிலையத்தில் உள்ளது போன்ற வசதிகளுடன் ஓய்வறை வசதி ஏற்படுத்தப்படும் என்றும், பயணிகள் ஓய்வறைகளில் தொழில் சார்ந்த கூட்டங்களை நடத்திக்கொள்ள வசதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே