டி.கே. சிவக்குமார் சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை

வரியை செலுத்த முன்வருவதால் மட்டும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் ஊழல் சொத்துகளை நல்ல சொத்துகளாக மாற்றிவிட முடியாது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் , சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

டி.கே.சிவக்குமாரின் பொருளாதார குற்றம் மிகப்பெரியது என்பதால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிவக்குமார் மற்றும அவர் சகோதரர்களுக்கு 27 சொத்துகள் இருப்பதை சுட்டிக் காட்டிய அமலாக்கத்துறை வழக்கறிஞர், இதில் 10 சொத்துகளை சிவக்குமார் ரொக்கப்பணம் கொடுத்து வாங்கியிருக்க வேண்டும் அல்லது அவர் தந்தையின் சொத்தாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அந்த சொத்தை எப்படி வாங்கினார் சிவக்குமார் என்று அவரால் பதில் கூற முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சிவக்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அபிசேக் சிங்வி மற்றும் முகுல் ரோட்டகி ஆகியோர் அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்தனர். சிவக்குமாரை சிறையில் வைத்திருக்கவே அமலாக்கத்துறை விரும்புவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே