சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இர்ஃபான்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் சேலம் நீதிமன்றத்தில் சரணடந்தார். அவரை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்த வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் இர்ஃபான் மீதும் ஆள்மாறாட்டப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரை அடுத்து இர்ஃபான் தலைமறைவானார்.

இர்ஃபானின் செயலுக்கு மூளையாக செயல்பட்டதாக அவரது தந்தை முகம்மது சஃபி கைது செய்யப்பட்டார்.

இந்தப் புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சீனிவாசராஜுக்கு திங்கட்கிழமை தேனி மாவட்ட சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து அவர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்த நிலையில் மொரிசியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட மாணவர் இர்ஃபான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இர்ஃபான் சேலம் மத்திய சிறைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே