சேலம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

சேலம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டி சேர்ந்த உண்ணாமலை அம்மாள் என்பவர் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபயிற்சி சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது நகையை பறித்துச் சென்றனர்.

இதேபோல் இலம்பிள்ளையை சேர்ந்த கனகா, தாரமங்கலத்தைச் சேர்ந்த ருக்குமணி ஆகியோரின் நகைகளையும் அதே நபர்கள் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் எடப்பாடியில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேர் பாலத்தில் மோதி கீழே விழுந்ததில் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தகவலறிந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் விபத்தில் சிக்கிய கார்த்தி மாரிமுத்து சரவணன் ஆகிய மூவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 5 சவரன் நகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே