சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பனுக்கு கடந்த 16ஆம் தேதி கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில் டெல்லி, மோதிநகர், சுதர்சன் பூங்கா பகுதியை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில், தனது மகனுடன் சேர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டை வெடிக்க வைக்கப்போவதாக கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தலைமை பதிவாளர் குமரப்பன் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து வாயில்களிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நீதிபதிகள் தலைமையிலான உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பிறகு, வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களின் அடையாள அட்டைகளுடன் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை ஆணையரின் உத்தரவின் படி உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு உதவி ஆணையர் விஜயராகவலு தலைமையில், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்ய டெல்லிக்கு விரைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே