குற்றங்களைக் கண்டுபிடிக்கும் முறைகளில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது சிசிடிவி காட்சிகள். இந்த அதிநவீன தொழில்நுட்பம் அடுத்த கட்ட பரிமாணத்திற்கு நகர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இப்படி ஒரு மெகா “பிக்பாஸ்” வீடாக மாறிவிட்டது சென்னை மாநகரம். 1189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரத்தை கண்காணிக்க 3 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது பற்றி மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பேசுகையில், “சிசிடிவி மூலமாக பாதுகாப்பு கிடைத்திருப்பதாகவும் மற்றும் முந்தைய ஆண்டை விட இவ்வாண்டில் 50சதவீதம் குற்றங்கள் குறைந்து இருப்பதாகவும்” கூறுகிறார்.

மாநகர காவல் ஆணையரின் இந்த பேச்சு க்ரைம் டிடெக்ட்ஷன் எனப்படும் குற்றம் நடந்த பின் துப்பறியும் தடத்தில் சென்னை மாநகர காவல்துறையின் சாதனைகளை பறைசாற்றுகின்றன. ஆனால் நூறு ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது போதுமானதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சிசிடிவி :
ஒரு தெருவில் செயின் பறித்துவிட்டு ஒருவர் ஓடுகிறார். பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கிறார். போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்த சிசிடிவியை ஆய்வு செய்கிறது. அதோடு குற்றவாளிகளின் பழைய புகைப்படத்தை ஒப்பிட்டு, படையை அனுப்பி குற்றவாளியை தேடி கைது செய்கின்றனர். இதற்கு ஓரிரு நாட்கள், சில இடங்களில் சில மணி நேரங்களாவது ஆகிறது.


லைவ் மானிட்டரிங் :
ஒரு தெருவில் செயின் பறித்துவிட்டு ஒருவர் ஓடுகிறார். உடனடியாக அவசர தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேரலையில் சம்பவம் இடம் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு அந்த நபர் எங்கு நகர்கிறார் என்பதை நேரலை வாயிலாக பார்த்து உடனடியாக விரைந்து, குற்றவாளி சில நிமிடங்களிலேயே கைது செய்யப்படுவார்.

இரண்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, தற்போதைய முறையில் குற்றம் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் பிடிப்பது என்பது ஆனால் லைவ் மானிட்டரிங்கில் நடக்கும் போதே தடுத்து கைது செய்ய இயலும் என்கின்றனர் புலனாய்வு நிபுணர்கள்.

மூன்றாவது கண் என்கிற மிகப்பெரிய திட்டத்தின் வாயிலாக மாநகரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன். ஆனால் இந்தத் திட்டம் தமது முழு வெற்றியை ஈட்ட லைவ் மானிட்டரிங் முறைக்கு விரைந்து மாற வேண்டும் என்பது காலத்தின் தேவை.

மனிதர்களால் கண்டுபிடிக்கப்படுவதுதான் இந்த தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் எப்படி வெற்றி பெறும் என்பது தான் இங்கே சவாலான விஷயமாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே