சிறிய நீதிமன்றங்களுக்கு பணியிடமாற்றம் செய்தால் செல்ல மாட்டேன் : தஹில் ரமானி

சிறிய நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்தால் செல்ல மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமானி கூறுவது, தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அகில இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது குறித்து பார் கவுன்சி தலைவர் அகர்வாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலிஜியத்தின் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்திருக்கும் தஹில்ரமானி ஏற்கனவே கொலிஜியம் எடுத்த முடிவுகளை ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்துக்கு தற்காலிக நீதிபதியாக தஹில் ரமானியை கொலிஜியம் பரிந்துரைத்தது என்றும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தஹில் ரமானியை நிரந்தர நீதிபதியாக்கி மூன்று முறை பொறுப்பு தலைமை நீதிபதி ஆக்கியது என்றும், இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தஹில் ரமானி தலைமை நீதிபதி ஆக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த உயர்வுகள் அடையும் போதெல்லாம் தஹில் ரமானி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது போல் தற்போதைய பணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று அகர்வாலா குறிப்பிட்டு உள்ளார்.

சிறிய நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்தால் செல்ல மாட்டேன் என தெரிவிப்பது தவறான முன் உதாரணமாக மாறிவிடும் எனவும், கொலிஜியத்தின் பரிந்துரைப்படி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது தஹில் ரமானி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே