சிவாஜி கணேசனின் பாடலை பாடி அசத்திய ஜெயக்குமார்.!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு வரலாற்றில் அழிக்க முடியாத பொக்கிஷம் என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினரும் சிவாஜி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை சிவாஜிக்கு உண்டு” என்றார்.

நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமை குறித்து விரிவாக புகழ்ந்துரைத்த ஜெயக்குமார், ‘உள்ளதை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்’ உள்ளிட்ட மூன்று பாடல் வரிககளை பாடிக்காட்டினார்.

பராசக்தி படத்தில் கலைஞரின் வசனங்களை தான் ரசித்ததாகவும், வரலாற்றில் அழிக்க முடியாத பொக்கிஷம் சிவாஜியின் நடிப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர் திலகத்தின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த நடிகர் பிரபு, சென்னை கடற்கரை சாலையில் சிவாஜி சிலை என்றாவது ஒருநாள் நிச்சயம் நிறுவப்படும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே