சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: காவலர் முத்துராஜ் கைது!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே கைது நடவடிக்கையை அறிந்து காவலர் முத்து ராஜ் தப்பி விட்டார். இதனால் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்தது. மேலும் அவரை இரண்டு நாட்களில் பிடித்து விடுவோம் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விளாத்திகுளம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த முத்துராஜின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் முத்துராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முத்துராஜை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாக தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே