சண்டே மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

புதுச்சேரி சண்டே மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊர்வலமாக சென்று முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.

புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி வீதி, நேரு வீதி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் தெருவோர கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படுவதால் இதற்கு சண்டே மார்க்கெட் என்று பெயர்.

மலிவான விலையில் இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். இந்நிலையில் சண்டே மார்க்கெட்டால் அதே பகுதியில் இயங்கி வரும் மற்ற கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூட்ட நெரிசலால் போக்குவரத்தும் பாதிக்கப் படுவதாக புகார் எழுந்தது.

எனவே சண்டே மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டுமென நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற முதலமைச்சர் நாராயணசாமி சண்டே மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி வீதி மற்றும் நேரு வீதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊர்வலமாக சென்று சட்டப்பேரவையில் முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே