10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து மாடியிலிருந்து வீசி கொலை செய்த இளைஞர் கைது

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் வசித்த 10 வயதுச் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கி 3 வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக பெண் குழந்தைகளை அதீத எச்சரிக்கையுடன் வளர்க்க வேண்டிய கட்டாயத்தில், நெருக்கடியில் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.

சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் வசிப்பவர் சுரேஷ் (29). இவருக்குத் திருமணமாகிவிட்டது.

கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுரேஷின் நடத்தை பிடிக்காமல், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

இவர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்தார்.

அச்சிறுமி அருகிலுள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி கழிப்பறைக்குச் சென்றார். பிறகு, அவர் திரும்பி வரவில்லை.

துக்கக் கலக்கத்தில் இருந்த பெற்றோர் நள்ளிரவு 12 மணி அளவில் சிறுமியைக் காணவில்லை என்று தேடினர்.

சிறுமி கிடைக்காததால் மதுரவாயல் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர்.

குடியிருப்பு அமைந்துள்ள பகுதி முழுவதும் தேடினர்.

அப்போது வீட்டின் பின்புறம் சிறுமி பலத்த காயத்துடன் கிடந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக போலீஸார் சிறுமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சிறுமி வீட்டின் மேல் மாடியில்தான் சுரேஷ் வசிக்கிறார்.

கழிப்பறைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய சுரேஷ் மாடிக்குத் தூக்கிச் சென்றதாகவும், அவர் சத்தம் போட்டு அழுததால் கோபமடைந்த சுரேஷ் ஆத்திரத்தில் சிறுமியைத் தாக்கி மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசிவிட்டு வீட்டுக்குச் சென்றதாகவும் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடக்கத்தில் எதுவும் தெரியாததுபோல் சுரேஷ் இருந்துள்ளார்.

பின்னர், போலீஸ் விசாரணையில் சுரேஷ் சிக்கிக் கொண்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்த புரிதலை பள்ளிக்கூடங்கள், வீட்டில் பெற்றோர் சொல்லித் தர வேண்டும், அவர்களுக்கு அக்கம் பக்கத்தவரால், வீட்டுக்கு வரும் உறவினர்களால், நண்பர்களால் பாலியல் சீண்டல்கள் வரும். அதைப் பெற்றோரிடம் சொல்லும் துணிச்சலை பெற்றோர் வளர்த்தெடுக்க வேண்டும்.

சொன்னால் நம்மை அடிப்பார்களோ, அல்லது நம்மை திட்டி நமக்கே புத்தி சொல்வார்களோ என்று குழந்தைகள் எண்ணும் நிலையில் பெற்றோர் குறிப்பாக தாய், சகோதரி இருக்கக்கூடாது.

மனம் விட்டுப் பேசும் நிலையில் பிள்ளைகளுடன் பழக வேண்டும்.

தவறாக யாரும் நடக்கும் பட்சத்தில் உடனடியாக அதுகுறித்துச் சொல்லும்போது ஆரம்பத்திலேயே தடுத்துவிடலாம்.

அதேபோன்று குழந்தைகள் வெளியில் விளையாடும்போது கண்காணிக்க வேண்டும்.

இரவில் தனியே வெளியில் செல்லும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என்பது மிக முக்கியம்.

தர்ஷன்களும், இதுபோன்ற சுரேஷ்களும், அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்ததுபோன்ற ஆட்களும் நம்மைச் சுற்றி உள்ளனர் என்பதை மறக்கவே கூடாது என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆண்கள் குற்றம் செய்யாதவாறு அடிப்படையில் இருந்தே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறும், குற்றம் செய்யாதவாறும் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என்றும் போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே