கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் கலவர முகங்களாக பார்க்கப்பட்ட இருவர் தற்போது நண்பர்கள்

ஒருபுறம் கண்ணீர் கரம், மறுபுறம் கனல் கக்கும் முகம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் கலவர முகங்களாக பார்க்கப்பட்ட இருவர் மனம் திருந்தியத்துடன் நட்புக்கு உதாரணமாக மாறியுள்ளனர்.
17 ஆண்டுகளுக்கு பின் அவர்களது வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

இந்தியாவில் நேரிட்ட மிக பெரிய கலவரங்களில் பட்டியலில் மிக முக்கிய இடத்தைப் பெறுவது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலை குஜராத் மாநிலம் கோத்ரா அருகே வழிமறித்த கும்பல் தீவைத்து கொளுத்தியது. இந்த கோர சம்பவத்தில் 57 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு முன்பாக அந்த ரயிலில் வந்து கொண்டிருந்த ஒரு சிலர் கோத்ரா ரயில் நிலையத்தில் நடந்துகொண்ட சில மோசமான செயல்கள்தான் ரயில் எரிப்பு சம்பவத்திற்கு காரணமாக கூறப்பட்டது.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தால் பெரும் கலவரம் மூண்டது. குஜராத்தில் சுமார் மூன்று மாதங்கள் நீடித்த கலவரத்தில் பலர் மாண்டனர். கலவரம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தாலும் இரண்டு பேரின் புகைப்படங்கள் கலவரத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தின. தம்மைத் தாக்க வந்த கும்பலை கையெடுத்து வணங்குகிறார் ஒருவர். மற்றொரு புகைப்படத்தில் கையில் ஆயுதங்களுடன் வீர முழக்கமிடுகிறார் இன்னொருவர்.

ஆம், அசோக் பர்மர் மற்றும் குத்புதீன் அன்சாரி புகைப்படங்கள்தான் கோத்ரா கலவரத்தை அன்றைய தினம் பிரதிபலித்தன. இச்சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இருவரும் நண்பர்களாக மாறியுள்ளனர்.

அதை நிரூபிக்கும் வகையில் அகமதாபாத்தில் அசோக் பர்மர் தொடங்கியுள்ள செருப்பு கடையை திறந்து வைத்துள்ளார் குத்புதீன் அன்சாரி. செருப்பு கடைக்கு ஒற்றுமை காலணியகம் என பெயர் வைத்துள்ளார் அசோக் பர்மர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பயிலரங்கம் ஒன்றில் இருவரும் சந்தித்ததாகவும் அன்றுமுதல் நண்பர்களாக இருப்பதாகவும் கூறுகிறார் அசோக் பர்மர். அஹமதாபாத்தின் முகம் தற்போது மாறிவிட்டது என தெரிவிக்கும் அசோக், அங்கு இந்து மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அசோக் கேட்டுக்கொண்டதால் அவரது செருப்பு கடையை திறந்து வைத்ததாக கூறும் அன்சாரி, இனி வரும் காலம் காயங்களை ஆற்றும் என்கிறார் நம்பிக்கையுடன் .

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 403 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே