கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறும் – அமைச்சர் உறுதி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கீழடியில் நடைபெற்று வரும் 5ஆம் கட்ட ஆராய்ச்சி இன்னும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என்றார்.

ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து தமிழக தொல்லியல்துறை மேற்கொள்ளும் என்றார்.

கீழடியில் தொழில்துறை மேலோங்கி இருந்தது என்றும் நெசவுத்தொழில் நடந்ததற்கான எச்சங்கள் உள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர் பாண்டியராஜன், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை 2 மாதத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார். 

கீழடியின் சின்னம் என்பது திமிலுடன் கூடிய காளை என்று கூறிய அமைச்சர் பாண்டியராஜன், 2 ஆயிரத்து 500 அண்டுகளுக்கு முன்னரே சிலிக்கா மணல் எனப்படும் உயர்தர மணல் கட்டுமானப் பணிகளில் பயன்பட்டுள்ளது என்றார்.

குதிரன், ஆதன் போன்ற பெயர்கள் பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், கைவினைத் தொழில்கள், நெசவுத் தொழில்கள் நடைமுறையில் இருந்துள்ளது என்றும் தந்தத்திலான பொருட்களையும் அக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே