கார்ப்பரேட் வரி குறைந்ததால், கார் விலையை குறைக்க முடிவு

கார்ப்பரேட் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், கார்களின் விலையை குறைப்பது குறித்து மாருதி சுசுகி நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததால், ஆட்டோ மொபைல் துறை பாதிக்கப்பட்டுள்ளது. கார்கள் உள்ளிட்ட பயணியர் வாகன விற்பனை கணிசமாக சரிந்தது. விற்பனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கார் நிறுவனங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதை அடுத்து, கார்ப்பரேட் வரியை மத்திய நிதி அமைச்சகம் குறைத்தது.

கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் செலுத்தும் கார்ப்பரேட் வரியை 34.9 விழுக்காட்டில் இருந்து 25.2 விழுக்காடாகக் குறைத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதன் காரணமாக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி குறையும் என்பதால், கார்களின் விலையைக் குறைக்க மாருதி சுசுகி நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

விலைக் குறைப்பு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று மாசுதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

விரைவாக முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள அவர் மாதக் கணக்கில் காத்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாருதி சுசுகியைப் போல் ஹூண்டாய், ஹோண்டா, டொயொட்டா போன்ற நிறுவனங்கள் தள்ளுபடியையும், கூடுதல் பலன்களையும் அளிக்க முடிவு செய்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே