கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்டது நடராஜர் சிலை

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக இருந்த 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை கடந்த 1982 ஆம் ஆண்டு திருடப்பட்டது.

இந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருந்ததை கண்டு பிடித்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் அதனை மீட்டுக்கொண்டு வந்தனர்.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு நேற்று நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணைக்குப் பின் நீதிபதி சிலையை மீண்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் நடராஜர் சிலை இன்று காலை 8.30 மணியளவில் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு கென்னடியான் கால்வாய் அருகில் உள்ள ஐயப்பன் கோவில் முன் வைத்து சிலை, அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் சார்ந்த அறநிலையத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சப்பரத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்ட சிலை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அம்பாசமுத்திரம் – நெல்லை பிரதான சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சிலை, அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டது. நடராஜர் சிலை அடுத்த 10 நாட்களுக்கு கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நடராஜர் சிலை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோவில்களைச் சார்ந்த பல சிலைகள் சுப்பிரமணியர் கோவிலில்தான் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலையும் அங்கு வைக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், சிலையை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிலேயே வைத்து வழிபாடுகளை தொடர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே