கர்நாடக மாநிலத்தில் ஒத்தி வைக்கப்பட்ட இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் ஒத்தி வைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காததால், சுயேட்சை உட்பட மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 17 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்களும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே கர்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு, அக்டோபர் மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, வழக்கு முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என தேர்தல் ஆணையத்திடம் கேட்டது.

மேலும் வழக்கு தொடர்பான விசாரணை மூன்றில் 2 பங்கு வரை நிறைவடைந்து விட்டதாகவும், அக்டோபர் 22ம் தேதி வழக்கு தொடர்பாக முடிவெடுப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. அதன்படி டிசம்பர் 5ம் தேதி தேர்தலும், டிசம்பர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இப்போது கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே