கண்ணீருடன் விடைபெற்றார் அலி பாபா குழும தலைவர் ஜேக் மா

சீனாவின் அலிபாபா குழுமத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ஜேக் மா பிரியாவிடை நிகழ்ச்சியின் போது கண்கலங்கினார்.

20 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து அலிபாபா குழுமத்தை ஒரு சிறிய அபார்ட்மென்டின் ஒரு பகுதியில் தொடங்கிய ஜேக் மா, பிறகு ஆசியாவிலேயே 460 பில்லியன் டாலர் என்ற அதிக சந்தை முதலீட்டு மதிப்பு கொண்ட அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராக இருந்தார்.

நேற்று தனது 55-வது பிறந்தநாளில் அவிபாபா குழுமத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ராக் ஸ்டார் பானியில் கிட்டார் வாசித்து அசத்திய ஜேக் மா தனது ஊழியர்களை மகிழ்வித்தார். பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் என 4 மணி நேரம் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட அரங்கில் நடந்த நெகிழ்வான பிரியாவிடை நிகழ்ச்சியில் ஜேக் மா கண்கலங்கினார்.

தான் கடந்த ஆண்டு உறுதியளித்தபடி சி.இ.ஓ. டேனியல் ஷங்கிடம் பொறுப்பை ஒப்படைப்பதாகக் கூறினார். பின் தன் ஊழியர்களிடையே உரையாற்றிய ஜேக் மா, இன்று இரவுடன் தான் ஓய்வு பெற்ற பின் புதிய வாழ்க்கையைத் தொடங்கவிருப்பதாகவும், நன்மைகள் பல உள்ளதாக தான் நம்பும் இந்த உலகில் பல வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறினார்.

தனக்கு உற்சாகத்தோடு இருப்பது பிடிக்கும் என்பதால்தான் சீக்கிரத்திலேயே ஓய்வு பெறுவதாகக் குறிப்பிட்டார். பலமான நிறுவனமாக இருப்பது எளிதல்ல, ஆனால் நல்ல நிறுவனமாக இருப்பது மிகவும் கடினம் எனக் குறிப்பிட்டார்.

பலமான நிறுவனம் என்பது அதன் வணிகத் திறன் சார்ந்தது என்றும் நல்ல நிறுவனம் என்பது பொறுப்பையும், கனிவையும் பொறுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே