ஒரே மேடையில் இரு தலைவர்கள்..

வரும் 22ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் நரேந்திரமோடி, நியுயார்க்கில் நடைபெறும் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் 27ஆம் தேதி அன்று உரை நிகழ்த்த உள்ளார்.

முன்னதாக, வரும் 22 ஆம் தேதி அன்று, டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் உள்ள NRG மைதானத்தில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி உரையாற்றவுள்ளார். ஹவுடி மோடி  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், 50 ஆயிரம் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்க உள்ளதாக வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஒரே மேடையில் டிரம்ப் தோன்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா மக்களிடையேயான உறவு மேம்பட இது சிறந்த வாய்ப்பு என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு துறை கூறியுள்ளது.

உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் எரிசக்தி துறைகளில் உறவை ஆழப்படுத்துவதற்கான விவாதம் நடத்தவும் வாய்ப்பு உண்டாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு வரலாற்று நிகழ்வு என அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா  கூறியுள்ளார். மோடி – டிரம்ப் இடையேயான உறவு சிறக்க, இந்த சந்திப்பு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து ஒரே மேடையில் தோன்றவுள்ள நாளை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையே சிறப்பான நட்புறவு உள்ளது என்பதைக் குறிக்கும் அடையாளம் இது எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கச் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்களிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் மோடி தெரிவித்துள்ளார். 

சமீபத்திய வரலாற்றில், இரு பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றுவது உலகில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே