ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கைவிடும் நேரம் வந்துவிட்டது- பிரதமர் மோடி

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

வறட்சியால் நிலங்கள் வறண்டு பாலைவனமாதலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா. உடன்படிக்கை பாரிஸ் நகரில் 1994ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதில் 196 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா இந்த உடன்படிக்கையில், 1996ம் ஆண்டு கையெழுத்திட்டது. யுன்சிசிடி (UNCCD) எனப்படும் இதற்கான கூட்டமைப்பின் தலைமை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் நிலையில், சீனா வசம் இருந்து தற்போது இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்நிலையில் நிலம் பாலைவனமாதலை கட்டுப்படுத்துவது தொடர்பான 14-வது ஐ.நா. மாநாடு டெல்லி அருகே உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றுவருகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, யுன்சிசிடி (UNCCD) கூட்டமைப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் சிறப்புமிக்க பங்களிப்பை வழங்குவதை இந்தியா எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார்.

பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், நிலத்திலும் பல்லுயிர் பெருக்கத்திலும் ஏற்படும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். பருவநிலை மாற்றத்தின் எதிர்மறையான பாதிப்புகளை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில் வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து நிலம் சுருங்குவதாக பிரதமர் கூறினார்.

கடல் அலைகளால் ஏற்படும் மண் அரிப்புகள், புயல், தாறுமாறான மழை பொழிவு, புழுதிப்புயல்கள் போன்றவற்றாலும் நிலம் பாழ்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். நிலம் சுருங்கும் பிரச்சினைக்கு மட்டுமல்ல, தண்ணீர் பற்றாக்குறைக்கும் தீர்வு காணப் படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்காக நீர் விநியோகத்தை அதிகரிப்பது, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்குவது, நிலத்தின் ஈரப்பதத்தை தக்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, இந்தியா வரும் ஆண்டுகளில் முற்றுப்புள்ளி வைக்கும் என தமது அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட மோடி இதற்க்கு உலகமே குட்-பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்று கடந்த மாதத்தில் “மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சுற்றுச் சூழல் தொடர்பாக குறிப்பாக நில நிர்வாகம் தொடர்பாக உலகம் தழுவிய விவாதத்திற்கு யுன்சிசிடி (UNCCD) மாநாடு வழிவகுக்கும் என பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

உலக அளவில் நிலங்களை பயன்படுத்துவதற்கான கொள்கை மற்றும் வாழிடங்கள் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது, வறட்சி, புழுதி, புயல் போன்ற பாதிப்புகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக முக்கிய 30 முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிகழ்வில் பல்வேறு நாடுகளிலிருந்து அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அறிவியல் அறிஞர்கள், பெண்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே