ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பாடி லோஷன், இ-சிகரெட் போன்ற பொருட்களை எடுத்துச் செல்வது கூட, சிறைக்கு செல்லும் அளவுக்கு சிக்கலில் மாட்டிவிட வாய்ப்பிருப்பதாக, பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.
கஞ்சா செடியில் காணப்படும் சிபிடி எனப்படும் பொருள், வலி நிவாரணியாக பயன்படக்கூடியதாகும்.
கஞ்சாவில் போதை தரும் பொருளான டி.ஹெச்.சி. என்பது, சிபிடி-யில் மிகமிகக்குறைவாக இருப்பதால் ஐரோப்பிய நாடுகளில் சட்டபூர்வமாக விற்கப்படுகிறது.
மேலும், டி.ஹெச்.சி. இல்லாத சிபிடி, அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சிபிடி கலந்த சோப்புகள், மாஸ்சரைசர்கள், ஐலைனர்கள், லிப்ஸ்டிக்குகள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் சட்டபூர்வமாக விற்கப்படுகின்றன.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிபிடி என்பது தடைசெய்யப்பட்டதாகும்.
இந்நிலையில், பாடி லோஷன்கள், இ-சிகரெட் நிரப்பிகளில், சிபிடி இருக்கலாம் என்பதால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வது சிக்கலுக்கு வழிவகுத்துவிடும் என பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அலுவலகம் எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் தனது நாட்டு பயணிகளுக்கு பிரிட்டன் அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. போதைப் பொருட்கள் விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறது.
தடை செய்யப்பட்ட பொருளை மிகச்சிறிய அளவில் எடுத்துச் சென்றால் கூட, குறைந்தது நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு வழிவகுத்துவிடும்.
போதைப் பொருட்களை எடுத்துச் செல்வது மட்டுமல்ல, பயணிகளின் ரத்ததத்தில் போதைப்பொருள் கலந்திருந்தால் கூட ஐக்கிய அரபு அமீரக அரசு அதை கடுமையாக அணுகுகிறது.
இந்நிலையில், துபாய் வழியாக பயணிப்பவர்கள் கூட, இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.