உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பாங்காக் நகரம் முதலிடம்

உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பாங்காக் நகரம் தொடர்ந்து 4வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் தலைசிறந்த 10 சுற்றுலா நகரங்களை தேர்வு செய்வதற்கான ஆய்வு, 200 நகரங்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் தொடர்ந்து 4வது முறையாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

பாங்காக் நகருக்கு ஆண்டுக்கு 2 கோடியே 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த பட்டியலில் பாங்காக் நகருக்கு அடுத்தபடியாக 2 மற்றும் 3வது இடங்களை பாரீஸ் மற்றும் லண்டன் நகரங்கள் பிடித்துள்ளன. பாரீஸ் மற்றும் லண்டனுக்கு ஆண்டுக்கு தலா 1 கோடியே 91 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக 4வது இடத்திலுள்ள துபாயில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 1 கோடியே 59 லட்சமாக உள்ளது.

5 மற்றும் 6வது இடங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகியவை பிடித்துள்ளன.

மேலும் நியூயார்க், இஸ்தான்புல், டோக்கியோ மற்றும் ஆந்தாலியா போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து முதல் 10 தலைசிறந்த சுற்றுலா நகரங்களாக இணைந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த 200 நகரங்களில் சர்வதேச அளவிலான சுற்றுலாப்பயணிகளின் வருகை 76 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பாங்காக் முதலிடத்தில் இருந்தாலும், தாய்லாந்து நாட்டிலுள்ள மற்ற சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகை 1.03 சதவீதமாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 0.89 சதவீதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே