திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணை ஃபேஸ்புக்கில் இருந்து எடுத்து, அவரது ஆபாசப் படம் தன்னிடம் இருப்பதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் போலீசில் சிக்கியுள்ளார்.
நல்லூரைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு அறிமுகம் இல்லாத எண் ஒன்றில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அவரது ஆபாசப் படம் தன்னிடம் இருப்பதாகவும் அதனை இணையத்தில் பதிவேற்றாமல் இருக்க 5 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் சேலத்தைச் சேர்ந்த நரேஷ் என்பது தெரியவந்தது.
அவனை கைது செய்து விசாரிக்கையில் அடுத்த மாதம் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு போதிய பணம் இல்லாததால் முகநூலில் இருந்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்து அவரை மிரட்டியதை ஒப்புக்கொண்டார்.
பாதுகாப்பு கருதி இளம்பெண்கள் தங்களது புகைப்படங்களையோ, செல்போன் எண்களையோ சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர்.