இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறினார் – ப.சிதம்பரத்துக்கு சிக்கல்

2007ஆம் ஆண்டில், இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது. இதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில், மகன் கார்த்தியின் வலியுறுத்தலின்பேரில், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முறைகேட்டிற்கு உதவியதாகவும், இதற்கு பிரதிபலனாக கார்த்திக்கு லஞ்சப் பணம் மறைமுக வழிகளில் கைமாறியுள்ளது என்பதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டாகும்.

மகள் ஷீனா போரா கொலை வழக்கில் தற்போது சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஜூலையில் அப்ரூவராக மாறியுள்ளார். மேலும் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தது தொடர்பான விவரங்களையும் விசாரணை அமைப்புகளிடம் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது வாக்குமூலத்தை பதிவு செய்த இந்திராணி முகர்ஜி, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, அவரது அலுவலகம் சென்று தானும் கணவர் பீட்டர் முகர்ஜியும் சந்தித்ததாக கூறியிருந்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வெளிநாட்டு முதலீட்டை திரட்டுவதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கைமாறாக, தனது மகன் கார்த்திக்கு தொழிலில் உதவுமாறும், வெளிநாடுகளில் லஞ்சப் பணத்தை வழங்குமாறும் சிதம்பரம் கேட்டுக் கொண்டதாகவும் இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ, கடந்த மாதம் 21ஆம் தேதி சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தது. தற்போது ப.சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஷீனா போரா கொலை வழக்கில், மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, சில நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால், இந்திராணி முகர்ஜியை சிறையில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ மும்பை சிறப்பு நீதிமன்றத்தை அணுகியிருந்தது. இதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது. எனவே, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி தொடர்புடைய, நிதிப்பரிவர்த்தனைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே முன்னர் ஒருமுறை மும்பை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்திராணி முகர்ஜியிடம், ப.சிதம்பரம் கைது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அது நல்ல செய்தி என அவர் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே