தேர்தல் அரசியலில் வெல்வதற்கு மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது, மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிப்பது, மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளைப் பெற முயல்வது என்பதெல்லாம் நம்பியார் கால டெக்னிக் என்றாகிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை அணுகுவதை விட கார்பொரேட் நிறுவனங்களையே பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.
எதையும் விளம்பரம் செய்தால் விற்று விடலாம் என்பதே தற்போதைய அரசியல்வாதிகளின் நிலை. இதற்காக உதவுவதற்கு என்று அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதற்கு என்று சில கார்பொரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அவற்றுள் OMG, IPAC போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.
இம்மாதிரியான நிறுவனங்களுக்கு தனிப்பட்ட அரசியல் பார்வை என்றெல்லாம் எதுவும் கிடையாது. இவர்களைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் தங்களது வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் பணம் மற்றும் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து இவை ஆலோசனைகளை வழங்கும்.
இதில் நம்பர் ஒன்னாக இருப்பது IPAC ( Indian Political Action Committee ).
இந்நிறுவனத்தை இயக்குபவர் ‘பிரஷாந்த் கிஷோர்’. இவர் வகுத்து கொடுக்கும் யூகத்தின் அடிப்படையில்தான் மோடி முதல் கமல் வரை தேர்தலை சந்திக்கிறார்கள்.
இவர்கள் அரசியல் கட்சிகளின் புரமோஷனுக்காக வாங்கும் கட்டணம் குறைந்தது 150 கோடி ரூபாய். பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் ஒரு பொது சுகாதார ஆய்வாளர்.
ஐக்கிய நாடுகள் சபையில் 8 வருடங்கள் பணியாற்றி விட்டு திரும்பிய இவர், தற்போது அரசியல் வியூக நிபுணராக அறியப்படுகிறார்.
2012ல் நடந்த குஜ்ராத் சட்டமன்ற தேர்தலின் போது ஊடகங்களில் அதிகம் அடிப்பட்டது இவரது பெயர் தான்.

2012 மோடிக்கு எதிராக வீசிய அலையை வெற்றியின் திசையில் மடைமாற்றியது இந்த பிரஷாந்த் கிஷோர்தான்.
குஜ்ராத்தில் மோடி மூன்றாவது முறையாக முதல்வராக, பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனைகள் தான் காரணம். அதன் பிறகு 2014-இல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வென்றது.
இதற்கு பின் நின்றது பிரஷாந்த் கிஷோரின் IPAC.
அப்போது முதல் மோடிக்கு நெருக்கமான நபராக வலம் வந்தார் இந்த பிரசாந்த் கிஷோர்.

முந்தைய சட்டமன்ற தேர்தலில் 66 தொகுதிகளில் மட்டுமே வென்று பலவீனமான நிலையில் இருந்தது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். அது 2019தேர்தலில் ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றியது.
ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார். இதற்குப்பின் செயல்பட்டது பிரஷாந்த்தின் புரோமோஷன் ஐடியாக்கள்.
ஜெகன்மோகன் ரெட்டியின் பலத்தை அதிகரிக்கும் யுக்திகளை சொன்னதோடு மட்டுமல்லாமல் சந்திரபாபு நாயுடுவின் புகழை காலி செய்யும் வேலைகளை IPAC நிறுவனம் சிறப்பாக செய்தது.
பை பை பாபு; உங்களை நாங்கள் நம்பமாட்டோம் சந்திரபாபு போன்ற விளம்பர வசனங்களை பிரபலப்படுத்தி எதிராளியை அடித்து ஆடியது இவரது நிறுவனம்.
மேலும் பூத்மட்டத்தில் மிகவும் பலவீனமாக இருந்த ஜெகன் கட்சியை பலப்படுத்த “ராவாலி ஜெகன் காவாலி ஜெகன்” என்ற பிரச்சார பாடலை உருவாக்கி அதனை கோடிக்கணக்கானோர் பார்க்கும் படி வைரல் ஆக்கி கெத்து காட்டியது. பலனை தற்போது ஜெகன் மோகன் ரெட்டி அனுபவிக்கிறார்.

மம்தா பானர்ஜியே தனது இமேஜை பூஸ்ட் செய்ய பிரஷாந்த் கிஷோரை நாடி இருக்கிறார்.
பிரஷாந்த் கிஷோருக்கு கட்சி சார்பு என்றெல்லாம் இல்லை. அவரை பொறுத்தவரை கட்சிகள் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மட்டுமே.

இந்நிலையில் 2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக வேலை செய்தார் பிரஷாந்த் கிஷோர். இதில் நிதீஷ் குமார் வெற்றி பெற்றார். மகிழ்ச்சி அடைந்த நிதீஷ் குமார், பிரசாந்த்தை தனது கட்சியின் துணைத் தலைவராககூட அறிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து சதவிகுத வாக்குகளை பெற்றது. அடுத்து இக்கட்சி எதிர்கொள்ளவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கமல்ஹாசன், பிரஷாந்த் கிஷோரை நாடி இருக்கிறார்.
தமக்கு முன்பாக கமல், பிரஷாந்த் கிஷோரை அணுகியதில் அதிமுகவிற்கு சற்று அதிருப்தி என்றும் சொல்லப்படுகிறது.
கமல்ஹாசனுடன் விவாதித்த பிறகு, பிரஷாந்த் கிஷோர் குழு கள ஆய்வில் இறங்கியது. அது அளித்த அறிக்கையின்படி,
மக்கள் நீதி மய்யம் இலக்கை அடைய இன்னும் 90% தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. 2021 தேர்தலில் கமல் நினைப்பதெல்லாம் சாத்தியமில்லை, வேண்டுமானால் 2026-இல் பார்க்கலாம் என்று சொன்னார்களாம்.
மேலும் பிரஷாந்த் கொடுத்த ஐடியாக்களின்படியே மக்கள் நீதி மய்யமானது, பிறகு மாவட்டங்களைப் பிரித்து நிர்வாகிகளை நியமித்தது.
பிரஷாந்த் கிஷோர் போட்ட அரசியல் ஸ்கெட்ச் ஒருமுறை மிஸ் ஆனது. 2017 உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார் பிரஷாந்த் கிஷோர். ஆனால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.
அப்போது காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க சொல்லி அவர் சொன்னதாகவும், அதனை மேலிடம் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவும்கூட தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வி அடைந்தது.
தேர்தலுக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாம் எவ்வளவு நலத்திட்டங்களை அறிவித்தும் நம்மால் வெற்றிபெற முடியவில்லை, நம்முடைய ஐடி டீமின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என பேசி இருக்கிறார்.
இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வியூகம் வகுக்க பிரஷாந்த் கிஷோரை பயன்படுத்தப்போவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக பிரச்சார வியூகங்ளை இதுவரை OMG நிறுவனம் தான் கவனித்து வருகிறது என்றாலும், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு கிஷோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாகவே ரஜினி அரசியலுக்கு வருவது இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரஷாந்த் கிஷோரை சந்தித்துப் பேசியிருக்கிறார் ரஜினி.
இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. பிரசாந்த் கிஷோர் – ரஜினி சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை என்றாலும், இது நிச்சயமாக ஒரு அரசியல் சந்திப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அரசியல்வாதியோ, சினிமா பிரபலமோ அல்லாத ஒருவர் இந்திய அரசியலை இயக்கும் இந்தப் போக்கை நிச்சயம் ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருத முடியாது.
என்றாலும் சமகால அரசியலில் இவையெல்லாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. விக்ரம் நடித்த சாமி படத்தில் வரும் பெருமாள் பிச்சை போன்ற கதாபாத்திரங்கள் பலர் நிஜ வாழ்விலும் உண்டு என்பதை தான் பிரசாந்த் கிஷோர் போன்ற நபர்கள் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.