ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரோட்டக்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தேசிய ஜனநாய கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 100 நாட்களும், வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் பெரிய மாற்றங்களை இந்தியா சந்தித்துள்ளதாக கூறினார். மேலும், முடிவெடுக்கும் தன்மை, உறுதிப்பாடு, முன்னேற்றம் மற்றும் நல்ல நோக்கத்திற்குரியதாக அந்த நாட்கள் இருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவால் தேசப்பாதுகாப்பு மற்றும் விவசாய துறை சார்ந்த பெரிய முடிவுகளை எடுக்கும் திறமையை மத்திய அரசு பெற்றதாக மோடி கூறினார்.
பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடவும், முஸ்லீம் சகோதரிகளின் உரிமைகளுக்காகவும் கடந்த 100 நாட்களில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா எந்த ஒரு சவாலுக்கும் சவால் விடும் திறனை கொண்டது என்பதை உலக நாடுகள் கண்டுகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரமாக இருந்தாலும் அல்லது தண்ணீர் பிரச்சினையாக இருந்தாலும் சவால்களை நேரடியாக எதிர்கொள்வது எப்படி என்பது தங்களுக்கு தெரியும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும் புதிய தீர்வுகளை கண்டுபிடிக்க தொடங்கி இருப்பதாக அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற, புதிய அணுகுமுறையுடன் பணியை தொடங்கியிருப்பதாக மோடி தெரிவித்தார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டார்.
வங்கி துறையை வலிமைப்படுத்தும் விதமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதை மோடி சுட்டிக்காட்டினார். இது தொடக்கம் மட்டும் தான் என்று தெரிவித்த பிரதமர், இதற்கான பலன் எதிர்காலத்தில் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.