நீண்டகால வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.
பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
நேற்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இன்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
அவர் பேசுகையில்,எஸ்சி மற்றும் எஸ்டிக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதா என்று சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்படி எதுவும் குறைக்கவில்லை. சிறுபான்மை விவகாரங்களுக்கான மொத்த ஒதுக்கீடு 2021-22 ஆம் ஆண்டில் ரூ .4,811 கோடியாக உள்ளது.
இது உண்மையான செலவினங்களை விட அதிகமாகும்.
எஸ்.சி.க்களின் நலனுக்காக வழங்கப்பட்ட ஒட்டுமொத்த ஒதுக்கீடு 2020-21ல் ரூ .83,257 கோடியிலிருந்து அதிகரித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் ரூ.1,26,259 ஆக இருந்தது. எஸ்.டி.க்களின் நலனுக்காக வழங்கப்பட்ட ஒட்டுமொத்த ஒதுக்கீடு 2020-21 முதல் ரூ .53,653 கோடியிலிருந்து 2021-22ல் ரூ .79,942 கோடியாக அதிகரித்துள்ளது.
வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்கள் நிதி வழங்காத வரை, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க இயலாது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய சீர்த்திருத்தங்களின் அடிப்படையிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீண்டகால வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.