இணையத்தை அணுகும் வசதி என்பது அடிப்படை உரிமை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு பயிலும் மாணவியும், அவரது தோழிகளும் விடுதியில் கொண்டு வரப்பட்ட மொபைல் பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மொபைல் போனைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதாகவும், இதனால் தாங்கள் படிப்பதற்கு இணையத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது.
இதை எதிர்த்து மாணவி தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இணைய வசதி பெறுதல் என்பது அடிப்படை கல்வி உரிமைக்கும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ன் படி அடிப்படை சுதந்திரத்துக்கும் உட்பட்டது என சுட்டிக்காட்டியது.
உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் சுட்டிக்காட்டிய விதிவிலக்கை மேற்கொள்காட்டிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. ஆஷா, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியை மீண்டும் சேர்த்துக்கொள்ள அதன் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மாணவர்கள் படிப்பதற்காக பயன்படும் கருவி இணையம் என்பதை அடிப்படை சுதந்திர சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணவர்கள் வயதுவந்தோர் என்றும், எப்போது எப்படி படிக்க வேண்டும் என முடிவெடுக்க அவர்களால் முடியும் என்பதை பெற்றோரும், கல்லூரிகளும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.