வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்… இளைஞர்களிடம் நூதன மோசடி

10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை வேலை தருவதாகவும், மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

சென்னை எம்.எம்.டி.ஏ வில் செயல்பட்டுவந்த ட்ரான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களில் படித்து முடித்தவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள் உள்ளிட்டோர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பேரில் வேலை தேடி அந்த நிறுவனத்தை அணுகியவர்களிடம் இருந்து தலைக்கு 7500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அலுவலக வேலை என்று கூறி பணிக்கு எடுக்கப்பட்டதாகவும், தங்கள் நிறுவனப் பொருட்களை விற்றுத் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் எம்.எல்.எம். பாணியில் ஆட்களை வேலைக்கு சேர்த்துவிட்டால் பணம் கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாங்கள் அனைவரும் 5 மாதங்கள் வேலை பார்த்தும் முறையாக ஊதியம் வழங்காததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து அங்கு சென்ற சென்னை சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் நிர்வாகிகளான பாண்டியன், ராஜ்கமல், ராஜா, ராஜ்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

ஏற்கனவே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான இளைஞர்களை மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த அருணா என்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதேபோன்றதொரு கும்பலைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே