ஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை..!

ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோடேலா சிவ பிரசாதா (Kodela Siva Prasada) தற்கொலை செய்து கொண்டிருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்குப் போட்ட நிலையில் இன்று காலை அவர் மீட்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவபிரசாதா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு பதவியேற்ற பிறகு, கோடேலா சிவபிரசாதா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

அவரது மகன் மற்றும் மகள் மீது ஊழல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சட்டப்பேரவையில் உள்ள உபகரணங்களை திருடிச் சென்றதாக சிவபிரசாதா மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

சிவபிரசாதா 6 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருந்தார்.  என்.டி. ராமா ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் அரசுகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

சிவபிரசாதா மறைவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். இதேபோல் தெலங்கானா பாஜக, தெலங்கானா காங்கிரஸ் ஆகியவையும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே