யாரை எங்கு அமர வைக்க வேண்டுமோ அங்கு அமர வைத்தால் அனைத்தும் சரியாக அமையும் என பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசி இருக்கிறார். அவரது மேடை பேச்சு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
திரையுலகிற்கு வந்தபோது மேடை பேச்சுக்களில் தயக்கம் காட்டிய நடிகர் விஜய், சமீபகாலமாக பொது மேடைகளில் சமூகம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
கடந்த ஆண்டு சர்க்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்க்கு, ரசிகர்களின் கரகோஷமும், விசில்களும் பறந்தன.
தமிழகத்துக்கு தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன் என்று அவரது மறைமுக விமர்சனம் அரசியல் கட்சியினர் இடையே பேசு பொருளாக மாறியது.
ஒரு மாநிலத்திற்கு நல்ல முதல்வர் இருந்தால், மாநிலமும் நன்றாக மாறும் என குறிப்பிட்ட விஜய், பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை பணம் கொடுக்க வேண்டி இருப்பதாக அரசின் செயல்பாட்டையும் கடிந்துகொண்டார்.
தொடக்கத்தில் பொது மேடைகளில் அடக்கி வாசித்த விஜய், புலி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தமது பாணியை மாற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
சினிமாவைப் போல் பல பஞ்ச் டயலாக்குகளை விஜய் பேசியதால் ரசிகர்களும் குதூகலமடைந்தனர். இந்நிலையில் தான் பங்கேற்கும் ஒவ்வொரு விழாவிலும் மேடை ஏறும்போது, சமூகம் சார்ந்த கருத்துக்களை உதிர்த்து வருகிறார் விஜய்.
மெர்சல் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், விஜய்யின் பேச்சை கேட்டு அவரை அடுத்த முதல்வரை போல் பாராட்ட தொடங்கினர்.
சர்க்கார் இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, பெரிய அளவில் மேடையில் தோன்றாமல் இருந்த நடிகர் விஜய் நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், பேனர் விழுந்ததால் சாலை விபத்தில் பலியான சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு அலட்சியமாக நடந்து கொள்வதாக மறைமுகமாக சாடினார்.
தமது ரசிகர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியால் கோபமடைந்த அவர், ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக அமையும் என சூசகமாக தெரிவித்தார். விஜய்யின் இந்த கருத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் யாரோ ஒருவரை அவர் முன் நிறுத்துகிறார் என்பது மட்டும் பலப்படுகிறது.
இது விஜய்யின் அரசியல் பின்னணியில் அடுத்த கட்டமாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. அரசியலில் புகுந்து விளையாடுங்கள் என்ற பேச்சு ரசிகர்களுக்கு அவர் விடுத்த அழைப்பாகவே எடுத்துக்கொள்ளலாம்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துக்கள் அவரது அரசியல் வருகையை எதிர் பார்ப்பவர்களின் ஆவலை மேலும் கூடியிருக்கிறது.